18,000 பங்கேற்பாளர்கள. சவாலுக்கு சவால் விட்ட நாயகியர்

'கொரோனா' (உ)பயத்தில் வீட்டில் முடங்கியிருக்கும் மக்கள், வைரஸ் தொற்றுக்கு அஞ்சி நாளிதழ்களைத் தொட்டு வாசிக்க தயங்குகின்றனர்' என, புதுசாக சிலர் கிளப்பிவிட்ட புரளியை, வாசிப்பையே உயிராக நேசிக்கும் வாசகர்கள் அடியோடு புறந்தள்ளி விட்டதை, 'நாயகியருக்கு சவால்' குவிஸ் போட்டி உறுதிப்படுத்தி இருக்கிறது. நம்பகமான, உண்மையான, உறுதியான, அதிகாரப்பூர்வத் தகவல்களைப்பெற எப்போதும் போல வாசகர்கள் நாளிதழ்களை வாசிக்கின்றனர் என்பதையும் அறிய முடிந்தது.

'நாயகியருக்கு சவால்' என்ற தலைப்பில், இல்லத்தரசிகளுக்காக, 'தினமலர்' நேற்று முதல், ஏழு நாட்களுக்கு துவக்கியுள்ள குவிஸ் போட்டி, பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. போட்டி அறிவிக்கப் பட்ட முதல் நாளிலிருந்தே, 'வாட்ஸ் ஆப்' எண்ணுக்கு முதலில் விரைந்து அனுப்பும், 25 இல்லத்தரசிகளுக்கு, தினந்தோறும், 25 'டிடிகே பிரஸ்டீஜ் மல்டிகுக்கர் 2.0' பரிசாக வழங்கப்படும்' என, 'தினமலர்' அறிவித்ததுதான் தாமதம், முதல் நாளில் இருந்தே 'ஹாய்!' என, தகவல் அனுப்பி சரி பார்த்த வண்ணம் இருந்தனர் வாசகியர்.


நேற்று காலை, போட்டி விதிமுறைகளின்படி, 8:00 மணிக்கு 'வாட்ஸ் ஆப்' எண்ணை, 'ஆன்' செய்ததும், பதில்களை அனுப்பி குவிக்கத்துவங்கினர். அடுத்த சில நிமிடங்களில், 3,000 பேர் பங்கேற்று, பதில்களை அனுப்பினர். நேரம் ஆக, ஆக பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை நாலாயிரம், ஐந்தாயிரம் என அதிகரித்து, ஒரு கட்டத்தில், அதாவது, போட்டி துவங்கிய, இரண்டு மணி நேரத்துக்குள், 12 ஆயிரம் பேரை கடந்துவிட்டது. தவிர, 330 பேர் போன், வாட்ஸ் ஆப் அழைப்புகளிலும் தொடர்பு கொள்ள முயன்றனர். போட்டி விதிமுறைகளின்படி அழைப்பை ஏற்க அனுமதியில்லை என்பதால், அவர்களது அழைப்புகள் தவிர்க்கப்பட்டன.


சாதாரண வழக்கமான நாட்களில் இதே போன்று நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்றவர்களை காட்டிலும், ஊரடங்கு காலத்தில் நடத்தப்பட்ட இப்போட்டியில், மாநிலம் முழுதும் இருந்து 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றது, நாளிதழ் வாசிப்பில் வாசகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்திருப்பதை உறுதி செய்கிறது. இப்போட்டி, வரும் ஞாயிறு வரை, தினந்தோறும் இல்லத்தரசிகளுக்காக நடத்தப்படுகிறது. ஒருவேளை, நேற்று நீங்கள் பங்கேற்க தவறியிருந்தால்... இன்று, மிஸ் பண்ணிடாதீங்க!